குடும்பத்தினர் கண்முன்னே தந்தை, மகன் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு
குடும்பத்தினர் கண்முன்னே தந்தை, மகன் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு

பெங்களூரு பிராட்வே காவல் நிலைய பகுதியைச் சேர்ந்தவர் ஷமீர் அகமது. இவர் தனது குடும்பத்துடன் நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர்கள் நாகூர் தர்காவில் வழிபாடு முடித்து விட்டு, இன்று காலை ஷமீர் அகமது அவரது மகன் முகமது அயான் (15) மற்றும் குடும்பத்தினருடன் நாகூர் சில்லடி கடற்கரையில் குளித்துள்ளனர்.
குடும்பத்துடன் அனைவரும் கடலில் மகிழ்ச்சியாக குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென வந்த கடல் அலையில் சிக்கி ஷமீர் அகமது அவரது மகன் முகமது அயான் ஆகிய இருவரும் குடும்பத்தினர் கண் முன்னே கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து குடும்பத்தினர் கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் கடலில் இறங்கிய தேடிப்பார்த்தனர்.

எனினும் உடனடியாக அவர்களை மீட்க முடியவில்லை. சிறிது நேரத்தில் ஷமீர் அகமது அவரது மகன் முகமது அயான் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து இருவரின் உடலையும் உடற்கூறு ஆய்வுக்காக நாகப்பட்டினம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சுற்றுலா வந்தவர்கள் குடும்பத்தினர் கண்முன்னே தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

