உயிர் பயத்தால் 8 டோஸ் தடுப்பூசி போட்ட இளைஞர்.. சிக்கிய சுவாரஸ்ய தகவல் !!
உயிர் பயத்தால் 8 டோஸ் தடுப்பூசி போட்ட இளைஞர்.. சிக்கிய சுவாரஸ்ய தகவல் !!

இந்தியாவில் ஒமைக்ரான் என்ற உருமாறிய வைரஸ் பரவி வருகிறது. இதில் மக்களை காக்க மத்திய அரசு கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஒரு நபர் உரிய கால இடைவெளியில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அனுமதி உள்ளது.
அத்துடன் ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தலாமா என அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
நகரப்பகுதிகளில் உள்ள மக்கள் தன்னார்வமாக வந்து தேடிச்சென்று கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறார்கள். ஆனால் கிராமப்புற மக்கள் உயிர் பயத்தில் தடுப்பூசி போடாமல் சாக்குப்போக்கு கூறி வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இதனிடையே, பெரிய நகரங்களில் உள்ள மருத்துவர்கள் அரசு அனுமதி அளிக்காத நிலையில் மூன்றாவது தடவை தடுப்பூசி செலுத்திக்கொள்வதாக புகார் கூறப்படுகிறது. வசதி படை மருத்துவர்கள் கள்ளச்சந்தையில் தடுப்பூசி செலுத்துவதாக கூறப்படுகிறது. எனினும் உறுதிபடுத்தாத தகவல் என்பதால் விசாரணை நடத்தப்படவில்லை.

இதனிடையே, கொரோனா அச்சத்தால் ஒரே நபர் தில்லுமுல்லு செய்து 8 தடவை தடுப்பூசி போட்டுக்கொண்ட சம்பவம் கர்நாகாவில் நடந்துள்ளது. அதிலும் அவர் 9ஆவது தடவையாக தடுப்பூசி போட முயன்ற போது தான் சிக்கியுள்ளார்.
பெலகாவி டவுன் சார்லிராய் நகரை சேர்ந்த நபர், ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். எனினும் கொரோனா டெல்டா, ஒமைக்ரான் என அச்சுறுத்த தொடங்கியதால் உயிர் பயம் ஏற்பட்டது. உடனே தடுப்பூசி தான் நம்மை காப்பாற்றும் எனக்கருதி போலியான முகவரி, செல்போன் எண்கள் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து 8 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார்.

ஆனால் அதுவரை அந்த நபரின் தில்லுமுல்லு பற்றி சுகாதாரத்துறையினருக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. இந்த நிலையில் 9ஆவது டோஸ் தடுப்பூசி போட அவர் அந்தப் பகுதியில் தடுப்பூசி முகாமிற்கு சென்றுள்ளார். அவர் கொடுத்த ஆவணங்கள் மீது சந்தேகம் எழுந்ததால் விசாரித்தப்போது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து தடுப்பூசி முகாம் அதிகாரி, பெலகாவி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 9-வது டோஸ் தடுப்பூசி போட முயன்ற நபரை கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உயிர் பயத்தில் போலி ஆவணங்கள் மூலம் 8 டோஸ் தடுப்பூசி போட்ட நபர் போலீசில் சிக்கிய சம்பவம் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. மேலும் 8 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அவருக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..
newstm.in

