Theme Check

‘நீட்’ தேர்வு அச்சம்.. திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை..!

‘நீட்’ தேர்வு அச்சம்.. திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை..!

‘நீட்’ தேர்வு அச்சம்.. திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை..!
X

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியைச் சேர்ந்தவர் அபிஷேக் (30). இவர், கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், காட்டூர் பகுதியைச் சேர்ந்த ராசி (27) என்பவருக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

2020-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ள ராசி, அடுத்ததாக முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

இதற்காக, காட்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து படித்து வந்துள்ளார். கடந்த சில வாரங்களாக நீட் தேர்வு குறித்த அச்சத்தில் இருந்த ராசி மனதளவில் மிகுந்த அழுத்தற்குள்ளாகி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டின் மூன்றாவது மாடிக்கு சென்று படிக்கப் போவதாக பெற்றோரிடம் கூறிச் சென்ற ராசி நீண்ட நேரமாகியும் மதிய உணவு சாப்பிட வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவரது தயார் செந்தாமரை பகல் 3 மணி அளவில் 3-வது மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

கதவை தட்டியும் திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார். அறையில் உள்ள மின் விசிறியில் தனது மகள் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமான 6 மாதத்தில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டதால் இது தொடர்பாக ஆர்.டி.ஓ தலைமையில் விசாரணை நடைபெற உள்ளது.

இதனிடையே, குடும்ப பிரச்சனை காரணமாக ராசி தற்கொலை செய்துகொண்டாரா..? அல்லது வேறு ஏதேனும் காரணமா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான ஆறே மாதத்தில் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it