பெண் காவலரின் கணவர் அடாவடி.. சுற்றிவளைத்து தூக்கிய தனிப்படை போலீசார் !!
பெண் காவலரின் கணவர் அடாவடி.. சுற்றிவளைத்து தூக்கிய தனிப்படை போலீசார் !!

குடியரசு தினத்தன்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இதனால் பெரும்பாலான குடிகாரர்கள் அதற்கு முந்தைய நாளே மதுபாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதேநேரத்தில், பலரும் மொத்தமாக வாங்கி குடியரசு தினத்தன்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்துள்ளனர்.
அந்த வகையில் ஆவடி காமராஜ் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது, பாரில் 2 ஊழியர்கள் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். பின்னர் அதிரடியாக பாரில் புகுந்த போலீசார் சோதனை நடத்தியபோது, 30 அட்டை பெட்டிகளில் 1,282 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்ததோடு, விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், எழும்பூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த சிக்கந்தர் (33), கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்த பெருமாள் (43) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், சிக்கந்தர் மனைவி ஜெகமத்பானு, அண்ணா சாலையில் மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

