திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டுத் தீர்பாயம் இனி இல்லை: மத்திய அரசு
திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டுத் தீர்பாயம் இனி இல்லை: மத்திய அரசு

திரைப்பச் சான்றிதழ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் இனி செயல்படாது என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு படைப்பாளிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்திய திரைப்படத் தணிக்கை வாரியம், தணிகைச் செய்து சான்றிதழ் வழங்கினால் மட்டுமே இந்தியாவில் படங்களை வெளியிட முடியும். அப்படி படங்களுக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டால், அதுதொடர்பாக முறையிட திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை படைப்பாளிகள் நாட வேண்டும்.
இந்நிலையில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, இனிமேல் திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்பாயம் செயல்படாது என அறிவித்துள்ளது. தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் இனி படைப்பாளிகள் நீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக நாட்டின் முக்கிய படைப்பாளிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்படி, தணிக்கை வாரியத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், வழக்கு முடிய நீண்ட காலமாகும். இதனால் துணிச்சலான கதைகளை எடுக்க இயக்குநர்கள் தயங்குவார்கள் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய திரைப்படத் துறையின் வேதனையான நாள் இன்று என பலரும் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

