மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!!
மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 11 மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மூன்று விசைபடகுகளையும், அதில் இருந்த 11 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது.
இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி அதில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும், அதற்கு முன்பாக பிடிக்கப்பட்ட விசைப் படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதனையடுத்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, வருகின்ற 11ஆம் தேதி ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இதையடுத்து இன்று ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் மீனவர்கள் தங்களுடைய படகுகளை கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் ஒரு நாளைக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
newstm.in

