நெகிழ்ச்சி.. கணவர் திருடிய நகை, பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த மனைவி..!
நெகிழ்ச்சி.. கணவர் திருடிய நகை, பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த மனைவி..!

புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அமிர்தா கார்டனை சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் துபாயில் வேலை செய்து வருவதால், இவரது மனைவி நசீமா (53) தனது தாயாருடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு நசீமா தனது தாயாருடன் வெளியில் சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 22 பவுன் நகை, ரூ.8 ஆயிரம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து நசீமா கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது, நசீமா வீட்டில் திருடியது சின்ன கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த அர்ச்சுனன் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இதற்கிடையே, தான் திருடிய நகை மற்றும் பணத்தை தனது மனைவி அன்பரசியிடம் கொடுத்தார் அர்ச்சுனன். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அன்பரசி, நகை மற்றும் பணம் குறித்து கணவரிடம் விசாரித்தார். அப்போது அவர் நசீமா வீட்டில் திருடியதாக தெரிவித்தார்.
இதையடுத்து கணவர் கொடுத்த 22 பவுன் நகை, ரூ.8 ஆயிரத்தை நசீமாவின் வீட்டிற்கே சென்று அன்பரசி ஒப்படைத்தார். மேலும், தனது கணவர் குடிபோதையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அதற்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும் கூறி கதறி அழுதார். அன்பரசியின் நேர்மையை கண்டு நெகிழ்ந்த நசீமா, போலீசில் தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார்.

