தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திரபிரதேச கடலோரம் அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ‘அசானி’ புயல் நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது.
அசானி இன்று மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நிலவுகிறது. இது படிப்படியாக மேலும் வலுவிழக்கக்கூடும்.
இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 14-ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 15-ம் தேதி மற்றும் 16-ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

