வலுக்கட்டாயமாக குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை: டார்கெட்டை முடிக்க புரோக்கர்களின் அடாவடி !!
வலுக்கட்டாயமாக குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை: டார்கெட்டை முடிக்க புரோக்கர்களின் அடாவடி !!

விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பார் சிந்தமணி நகரைச் சேர்ந்தவர் முத்துச்சேர்மன். இவருக்கு திருமணமாகி பஞ்சவர்ணம் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஆரம்பத்தில் முத்துச்சேர்மன் விறகு வெட்டும் தொழில் செய்து வந்த நிலையில், இடையில் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் அவரால் சரிவார பேச முடியாத நிலை இருந்துள்ளது. இதையெடுத்து கிடைத்த சிறு, சிறு வேலைகளை செய்து வந்தார். அவ்வப்போது விறகு வெட்டுவதற்கு கூப்பிட்டால் தன்னால் முடிந்தால் சென்று வந்துள்ளார். அவருடைய மனைவி பஞ்சவர்ணத்தின் உழைப்பில் தான் அந்த ஒட்டுமொத்த குடும்பம் வாழ்ந்து வருகிறது. மிகவும் ஏழ்மையான குடும்பம், தம்பதியினர் இருவருக்குமே கல்வி அறிவு என்பது துளி கூட இல்லாத நிலையில் தங்களது குழந்தைகள் கஷ்பட்டு படிக்க வைத்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி முத்துச்சேர்மன் மனைவி வேலைக்கு சென்று விட, குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட, முத்துச்சேர்மன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சூறவாளி என்று அழைக்கப்படும் நபர் மற்றும் சிலர் விறகு வெட்டும் வேலை உள்ளது கொஞ்சம் நேரம் தான் என்று கூறி முத்துச்சேர்மனை அழைத்துச்சென்றுள்ளனர்.
மாலையில் முத்துச்சேர்மன் மனைவி பஞ்சவர்ணம் வீட்டிற்கு வரும் போது, வீட்டில் முத்துச்சேர்மன் அழுது கொண்டு இருப்பதை கண்டு என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். அப்போது சூறவாளி உள்ளிட்ட சிலர் தன்னை வேலைக்கு என்று அழைத்து சென்று, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று, வலுக்கட்டயமாக வாயில் பஞ்சினை வைத்து தனக்கு குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்து விட்டதாகவும், தனக்கு அதிகமாக வலி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மருத்துவமனையில் கொடுத்ததாக ரூ. 1,100க்கு காசோலையும் கொடுத்துள்ளார். இதையெடுத்து பஞ்சவர்ணம் மற்றும் அவரது உறவினர்கள் முத்துச்சேர்மனை அழைத்து சென்ற சூறவாளியிடம் இது குறித்த கேட்ட போது, இதனால் யாரும் சாகபோவதில்லை, நானும் பண்ணி இருக்கேன் என்று கூறியது மட்டுமின்றி அவர்கள் கையில் கூடுதலாக ரூ 3 ஆயிரம் கொடுத்து, இந்த பிரச்சினையை இதோடு விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

