பள்ளி சிறுமிக்கு கட்டாயத் திருமணம்..! வெளியான ஆடியோவால் தந்தை, கணவர் தலைமறைவு!!
10ஆம் வகுப்பு மாணவிக்கு கட்டாயத் திருமணம்..! வெளியான ஆடியோவால் தலைமறைவான தந்தை,கணவர்..

திருமண வயதை எட்டாத நிலையில், தந்தை கட்டாய திருமணம் செய்து வைத்ததாக பள்ளி மாணவி ஒருவர் ஆடியோ பதிவு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் பாக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கனகசபாபதி. இவர் தனது 15 வயதேயான தனது மகளை, பெருமானூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமண வயதை எட்டாததன் காரணமாக, இந்த திருமணத்துக்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அதனை பொருட்படுத்தாமல் தனது மகளுக்கு கனக சபாபதி ரகசிய திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதையடுத்து அந்த மாணவி தமிழக அரசின் குழந்தைகள் நல ஆணையத்தை தொடர்பு கொண்டபோது அவருக்கு உதவி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், தனது கணவனுக்கு தெரியாமல், அவரது செல்போனை எடுத்து ஆடியோ பதிவுசெய்து, தனது தோழிக்கு அனுப்பியுள்ளார். அதில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும், தான் திருமண வயதை அடையாததையும் குறிப்பிட்டதாக தெரிகிறது.
இதன் பின்னர் தான் சிறுமியின் திருமண விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு இந்த தகவல் தெரியவந்ததை அடுத்து, விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனிடையே அந்த பெண்ணுக்கு திருமணம் முடிந்து விட்ட காரணத்தாலும், அந்த சிறுமியை திருமணம் செய்த இளைஞரின் தாயார் அரசு ஊழியர் என்ற காரணத்தாலும், போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
newstm.in



