மு.க.ஸ்டாலின் மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டும் முன்னாள் திமுக அமைச்சர்!!
மு.க.ஸ்டாலின் மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டும் முன்னாள் திமுக அமைச்சர்!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தருமபுரி மாவட்ட அரசியலில் தவிர்க்க முடியாத நபரான வ.முல்லைவேந்தன், அதிமுகவில் பேச்சாளராக அரசியல் பயணத்தை தொடங்கி, பின்னர், திமுகவில் இணைந்து, தருமபுரி மாவட்ட செயலாளராக உயர்ந்தார்.
1989, 1996 மற்றும் 2016 தேர்தல்களில் மொரப்பூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார். 1996ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். ஆனாலும், 2001ஆம் ஆண்டின் துவக்கத்தில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தருமபுரி தொகுதியில் தோல்வியடைந்ததற்கான விளக்கம் கேட்டு கட்சித் தலைமை அனுப்பிய கடிதத்திற்கு முறையான விளக்கம் அளிக்காததால் 2015இல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

அவர் 2016ஆம் ஆண்டு தேமுதிகவில் இணைந்தார். அங்கு தீவிரமாக செயல்படாத அவர், கருணாநிதி மறைவுக்கு பிறகு 2018இல் மீண்டும் திமுகவில் ஐக்கியமானார். ஆனாலும் அவருக்கு அங்கு முக்கிய பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை.
இதனால் விரக்தியில் இருந்த முல்லைவேந்தன், 2021 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அதிமுகவில் இணைந்தார். அதன் பயனாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளும் அதிமுக, பாமக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியபோது முல்லைவேந்தன் அவருக்கு ஆதரவாக வீட்டிற்கு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கல் பர்சுத்தொகுப்பு வழங்கியதில் நடைபெற்ற ஊழல்களை திசைத்திருப்பவே லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றதாக குற்றம் சாட்டினார்.

மு.க.ஸ்டாலின், பொங்கல் பண்டிகைக்கு 5,000 வழங்காமல் மக்களை ஏமாற்றிவிட்டதாகவும், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து பொய்களை அடிக்கி குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்துவிட்டதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ஏற்கனவே தருமபுரியில் திமுகவின் செல்வாக்கு சரிந்து வருவதால், முல்லைவேந்தனின் பேச்சை அறிந்த கட்சித் தலைமை அவர் மீது கடும் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in

