முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி படுகொலை !!
முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி படுகொலை !!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி டெல்லியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் தென்மேற்கு பகுதியில் வசந்த் விஹாரில் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் வசித்து வந்தார். நேற்றிரவு அவரது மனைவி கிட்டி குமாரமங்கலத்தின் வீட்டில் இருந்துள்ளார். அப்போது ஒரு கும்பல் அவரது வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சித்தது. அதனை தடுக்க முயன்றப்போது முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி கிட்டி குமாரமங்கலத்தின் கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ராஜு (24), கிட்டி குமாரமங்கலத்தின் வீட்டில் துணி துவைக்கும் வேலை செய்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில், இரவில் வீட்டுக்குள் நுழைந்த ராஜூ மற்றும் அவரின் கூட்டாளிகள் கிட்டியைத் தாக்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து அவரை தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளனர் என கூறுகின்றனர். மேலும் குற்றம் நடந்த இடத்தில் சூட்கேஸ்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். தற்போது ராஜு மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது இரண்டு கூட்டாளிகளைத் தேடிவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ரங்கராஜன் குமாரமங்கலம் சேலம் தொகுதி எம்.பியாகி 1991ம் ஆண்டு நீதித்துறை இணை அமைச்சராக செயல்பட்டார். 93ம் ஆண்டு தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் பிறகு அவர் பாஜகவில் இணைந்து வாஜ்பாயின் அமைச்சரவையில் எரிசக்தி துறை அமைச்சராக பதவி வகித்தார். திருச்சிராப்பள்ளி எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட அவர் வாஜ்பாயின் இரண்டு ஆட்சியிலும் அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது
newstm.in

