இரவில் இலவச பயணம்.. பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு !!
இரவில் இலவச பயணம்.. பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு !!

இரவு 10 மணிக்கு பிறகு பெண்களுக்கும், முதியவர்களுக்கும் இலவச ஆட்டோ சவாரி வழங்கும் பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
சென்னையில் இரவு பயணத்துக்கு பேருந்துகள் மிக குறைவாக தான் இயக்கப்படும். ஆட்டோக்களும் குறைந்த எண்ணிக்கையில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கும். இதனால் வசதியானவர்கள் கால் டாக்சி அல்லது சொந்த கார்களில் இரவில் பயணம் செய்துக்கொள்வர். இந்த நிலையில் எளிய மக்களுக்கும் சேர்த்து இரவில் இலவச ஆட்டோ சவாரியை தொடங்கியுள்ளார் பெண் ஒருவர்.
பெண் ஆட்டோ ஓட்டுநர் ராஜி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். வசதியான குடும்பத்தில் இல்லாமல் இருந்தாலும் தன்னால் முடிந்த அளவிற்கு ஏழை- எளிய மக்களுக்கு உதவி செய்தும் வருகிறார். இவர், பெண்களுக்கு, முதியவர்களுக்கு ,அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக ஆட்டோ ஓட்டி சேவையாற்றி வருகிறார்.

குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் மாணவிகள் ,முதியவர்கள் ,பெண்கள் ஆகியோருக்கு இலவசமாக ஆட்டோ சவாரி வழங்கும் அவர், அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்லவும் உதவி புரிகிறார். அத்துடன் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் அவதிப்படும் பெண் குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த கல்வி கட்டணத்தை செலுத்தும் சேவையையும் ராஜி மேற்கொண்டு வருகிறார்.
பணம் படைத்தவர்களே, இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ தயங்கும் இந்த காலகட்டத்தில், சொந்த காலில் உழைத்து சம்பாதித்து வரும் இந்த நடுத்தர குடும்பத்து பெண், மற்றவர்களுக்கும் உதவி செய்து வருவது பலரையும் கவர்ந்துள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
newstm.in

