பிபின் ராவத் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு..!
பிபின் ராவத் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு..!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது.
விபத்தில் இறந்த 13 பேரின் உடல்கள் கோவை சூலூரில் இருந்து தனி விமானம் மூலம் தலைநகர் டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தை நேற்று இரவு 7.35 மணிக்கு சென்றடைந்தது.
பாலம் விமான நிலையத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் டெல்லி காமராஜ் மார்க் பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்பின்னர் இறுதி ஊர்வலம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
டெல்லியில் உள்ள பிரார் சதுக்கத்தில் உள்ள சுடுகாட்டில் முழு ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத்தின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ராணுவத்தினர் செய்து வருகிறார்கள்.

