இரு வேறு தடுப்பூசிகள் போடுவது ஆபத்தான முடிவு..!!
இரு வேறு தடுப்பூசிகள் போடுவது ஆபத்தான முடிவு..!!

கொரோனாவுக்கு எதிரான பெரும்பாலான தடுப்பூசிகள் 2 தவணைகள் செலுத்த வேண்டிய தடுப்பூசிகளாகவே இருக்கின்றன. ஒரு தடுப்பூசியை முதல் தவணை செலுத்தி, குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னர் அதே தடுப்பூசியை 2-வது தவணை செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் இதே முறையில்தான் செலுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் முதல் தவணையிலும், 2-வது தவணையிலும் வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்துகிறபோது, குறிப்பாக கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்துகிறபோது அது பாதுகாப்பானது மட்டுமல்ல, கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பான பலனை, அதாவது நோய் எதிர்ப்பு சக்தியைத்தருகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், கொரோனாவைத் தடுப்பதற்கு இரு வேறு தடுப்பூசிகள் போடுவது ஆபத்தான முடிவு என சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு தடுப்பூசி சரியாக இருக்கும்போது ஏன் மற்றதைக் கலந்து சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இரு டோஸ் தடுப்பூசிகளுக்கு இடையிலான காலகட்டத்தை ஒன்றிய அரசு நீட்டித்திருப்பதையும் அவர் விமர்சித்தார்.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட 6 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் சைரஸ் பூனவல்லா தெரிவித்துள்ளனர்.

