பயத்துடனே பள்ளிக்கு செல்கின்றனர்.. மாணவிகளின் பெற்றோர் கலெக்டரிடம் புகார்..!
பயத்துடனே பள்ளிக்கு செல்கின்றனர்.. மாணவிகளின் பெற்றோர் கலெக்டரிடம் புகார்..!

மதுரை மாவட்டம் காண்டை கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி - முருகேஸ்வரி தம்பதியினர் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு பிள்ளைகளும் அருகிலுள்ள அரசுப் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், முருகேஸ்வரியின் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசித்து வரும் செல்வம் என்பவர், வீட்டில் தனியாக இருந்த முருகேஸ்வரியின் இரு பெண் பிள்ளைகளை தகாத வார்த்தைகளால் பேசி, அரிவாளை காட்டி மிரட்டி அவர்களை தாக்கியுள்ளார். இதில், 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியின் கையில் வெட்டுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக சிந்துபட்டி காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை முனியாண்டி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் செல்வத்தை கைது செய்தனர். ஆனால், இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த செல்வம், தனது மகள்களை தினசரி மிரட்டுவதாகவும், பள்ளிக்கு செல்லும் சமயங்களில் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் பின்தொடர்ந்து அச்சுறுத்தல் தருவதாகவும், இதனால் மகள்கள் பள்ளிக்கு செல்ல அச்சமடைந்து வீட்டிற்குள்ளயே முடங்கியிருப்பதாகவும் தெரிவித்து பள்ளி மாணவியர்களின் பெற்றோர் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி மனு அளித்தனர்.
தங்களது குடும்பத்திருக்கும், செல்வத்திற்கும் எந்த பகையும் இல்லாத நிலையில், தேர்தல் முன்விரோதம் என பொய்யான காரணத்தைக் கூறி எங்களை கையில் வெட்டியதுடன், நாங்கள் பள்ளிக்கு செல்லும் போது தொடர்ந்து அச்சுறுத்துவதால் உயிர் பயத்துடன் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் உணவு கூட உண்ணாமல் அச்சத்துடன் இருப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.
Next Story

