ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. தியேட்டர்களில் இனி 100 சதவீதம்.. அனுமதி வழங்கியது அரசு..!
ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. தியேட்டர்களில் இனி 100 சதவீதம்.. அனுமதி வழங்கியது அரசு..!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது; “கர்நாடகாவில் கொரோனா 3-வது அலை தொடங்கியதை அடுத்து கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் தியேட்டர்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 15-ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால் தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களில் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் கொரோனா பாதித்தவர்களில் சுமார் 5 சதவீதம் பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். அது தற்போது 2 சதவீதமாக குறைந்துள்ளது.
இதை அரசு கவனித்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி, தியேட்டர்களில் 100 சதவீதம் பேர் இருக்கையில் அமர்ந்து படம் பார்க்கலாம்.
அதே போல் யோகா மையம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளத்திலும் 100 சதவீதம் பேர் தங்களின் பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால், அங்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
அதாவது, முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்கள். விதிமுறைகள் மீறப்பட்டால் அத்தகைய தியேட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுகுறித்த வழிகாட்டுதலை அரசு வெளியிடும். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யாருக்கும் பொருளாதார இழப்பு ஏற்படக்கூடாது என்று கருதி இந்த கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது” என்று அவர் கூறினார்.

