விவசாயிகளுக்கு நற்செய்தி.. வங்கிக் கணக்கில் ரூ.10,000.. எதற்கு தெரியுமா..?
விவசாயிகளுக்கு நற்செய்தி.. வங்கிக் கணக்கில் ரூ.10,000.. எதற்கு தெரியுமா..?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின் மோட்டார், பம்பு செட் அமைக்க மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரால் சட்டமன்றத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வழங்கும் திட்டம் தொடர்பாக தனி நிதிநிலை அறிக்கை அறிவிக்கப்பட்டு, உரிய அரசாணை பெறப்பட்டுள்ளது.
இத்திட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் பாசன நீரை இறைத்திட புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்ப் செட்டுகள் பொருத்திக் கொள்ளலாம்.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு ஒரு மின் மோட்டார் பம்பு செட்டுக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிறு, குறு விவசாயி சான்றிதழ் மற்றும் அடங்கல் கிணறு அமைத்துள்ள நிலவரைபடம், மின் இணைப்பு அட்டை விவரம் மற்றும் வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க நகலுடன் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் கோட்ட பகுதி விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் உப கோட்ட அலுவலகங்களில் விவசாயிகள் நேரில் வந்து உரிய படிவத்தில் மனுக்கள் அளித்து பதிவு செய்துகொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி சங்கராபுரம், வெள்ளிமலை மற்றும் சின்னசேலம் வட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை, எண் 3 வெற்றிவேல் காம்ப்ளக்ஸ், தச்சூர் கூட்டு ரோடு, தச்சூர், கள்ளக்குறிச்சி அல்லது 04151-291125 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை வட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் வேளாண்மைப் பொறியியல் துறை, 45/72 பெரியார் தெரு, என்.ஜி.ஜி.ஓ. நகர், திருக்கோவிலூர் அல்லது 04153-253333 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம்” என மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

