அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. சென்னை ஐகோர்ட் அதிரடி ஆர்டர்..!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. சென்னை ஐகோர்ட் அதிரடி ஆர்டர்..!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், சாந்தி விஜய் பெண்கள் பள்ளி எனும் தனியார் பள்ளி அருகில் உள்ள அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் உழவர் சந்தை, பட்டாசுக் கடைகள் வைக்கப்படுவதாகவும், விளையாட்டு அல்லாத நிகழ்வுகள் அந்த மைதானத்தில் நடைபெற்று வருவதாகவும் கூறி, தனியார் பள்ளியின் பகுதி நேர ஆசிரியர் உஷா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, அரசுப் பள்ளிக்குச் சொந்தமான 2.40 ஏக்கர் விளையாட்டு மைதானத்தை காலை 10 மணி முதல் பகல் 1.30 மணி வரை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்த அனுமதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த பகுதி வாகனங்கள் நிறுத்த பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரசுப் பள்ளி மைதானத்தை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்த அனுமதித்ததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, மைதானத்தை தனியார் பள்ளி பயன்படுத்த அனுமதி அளித்த உத்தரவை திரும்பப் பெறுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசுப் பள்ளிக்கு சொந்தமான நிலத்தை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்த அனுமதித்தது எப்படி என்பது குறித்தும், சொந்தமாக மைதானம் இல்லாத தனியார் பள்ளிக்கு அங்கீகாரம் ஏன் வழங்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதுதொடர்பாக 3 வாரத்தில் விளக்கம் அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர். அரசுப் பள்ளி மைதானத்தை அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

