Theme Check

போலீசாருக்கு நற்செய்தி.. பஸ்களில் இலவச பயணம்.. டிஜிபி சைலேந்திரபாபு தகவல்..!

போலீசாருக்கு நற்செய்தி.. பஸ்களில் இலவச பயணம்.. டிஜிபி சைலேந்திரபாபு தகவல்..!

போலீசாருக்கு நற்செய்தி.. பஸ்களில் இலவச பயணம்.. டிஜிபி சைலேந்திரபாபு தகவல்..!
X

“காவலர்கள் அடையாள அட்டையை காட்டி பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்வது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது” என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.

‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், காவல்துறையில் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், திருச்சி மத்திய மண்டலத்திற்கான காவலர் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுகை, திருச்சி, ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள் பங்கேற்றனர். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு 1069 காவலர்களிடம் குறைகேட்டு, மனுக்களை பெற்றார்.

அப்போது அவர் பேசுகையில், “காவல் துறையினர் தைரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் பணியாற்றும் வகையில், அவர்களது குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள சிறு தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஏற்கெனவே இருந்த தண்டனைகள் மீது வரப் பெற்ற கருணை மனுக்களின் அடிப்படையில், காவல் துறையில் கடந்த 5 மாதங்களில் 366 பேரின் தண்டனை முற்றிலும் ரத்து செய்யப்பட்ட நிலையில், 164 பேரின் தண்டனை குறைக்கப்பட்டது. பணியில் இருந்து நீக்கப்பட்ட 51 பேர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். விருப்பத்தின் அடிப்படையில் 1,353 பேருக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் கடந்த வாரம் அளிக்கப்பட்டது.

காவல் துறை பணி என்பது சவாலானது. அவர்களுக்கு போதுமான ஓய்வு அளிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். அதனடிப்படையில், அவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. காவலர்கள் உற்சாகத்துடன், சிறந்து பணியாற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

காவலர்கள் அடையாள அட்டையை காட்டி பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்வது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது. காவல்துறையினரின் பிள்ளைகள் 800 பேருக்கு அண்மையில் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், மேலும் 800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவுள்ளது” என்றார்.

Next Story
Share it