சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.. கொடைக்கானலில் வரும் 24-ம் தேதி கோடை விழா..!
சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.. கொடைக்கானலில் வரும் 24-ம் தேதி கோடை விழா..!

கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோடை விழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் திட்டமிட்டபடி கோடை விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக, பிரசித்தி பெற்ற பிரையன்ட் பூங்காவில் லட்சக்கணக்காக மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தற்போது அவை பூத்துக் குலுங்கி வருகின்றன.
அதேபோல, ரோஜா தோட்டத்திலும் பல்வேறு வகையான ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளன.
மேலும், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே தொடர் சாரல் மழை பெய்து வருவதாலும், வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்ததாலும் இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனிடையே, இந்த வருடத்திற்கான கோடை விழா வருகிற 24-ம் தேதி தொடங்குகிறது என மாவட்ட கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
29-ம் தேதி வரை 6 நாட்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மேலும், ஜூன் 2-ம் தேதி வரை 10 நாட்கள் சுற்றுலாத்துறை சார்பில் கோடைவிழா நடைபெற உள்ளது.
இந்த விழா நாட்களில் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, வாத்து பிடித்தல் போட்டி, நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள் என்பதால் கொடைக்கானலில் தற்போதே அனைத்து தங்கும் விடுதிகளும் புக்கிங் செய்யப்பட்டு வருகின்றன.
2 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகளை தோட்டக்கலைத்துறையினர் மற்றும் சுற்றுலாத் துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

