பெண்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் தமிழக அரசு !!
பெண்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் தமிழக அரசு !!

500 பெண்களுக்கு ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் சி.வி.கணேசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்குள் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிதாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்கும்பொருட்டு தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் தொகை 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பெண் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகப்பேறு நலத்திட்ட உதவித்தொகை 6000 ரூபாயிலிருந்து 18000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் இப்போது வழங்கப்பட்டு வரும் திருமண நலத்திட்ட உதவித்தொகை 20000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்படும். பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகளை தவிர்க்க உயர்மட்டக் குழு அமைத்து நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் கூறினார்.
newstm.in

