தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகள்.. ஜி.கே.வாசன் கோரிக்கை..!
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகள்.. ஜி.கே.வாசன் கோரிக்கை..!

“அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தி, பராமரித்து, கல்வித்தரத்தை உயர்த்தி மாணவர்களின் வருங்கால உயர் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும், நல்வாழ்வுக்கும் உதவிட வேண்டும்” என, அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தற்போது, கொரோனாவின் பாதிப்பு பெருமளவு குறைந்து விட்டதால் இனிமேல் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தடை ஏற்படாத வகையில் கல்வி தொடர நடவடிக்கை தேவை.
அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால், தனியார் பள்ளிகளில்தான் மாணவ - மாணவிகளும், ஆசிரியர்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்.
அரசுப்பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களின் இடை நிற்றலை தவிர்ப்பதையும், அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்ப்பதையும் அரசு முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும்.
எனவே தமிழக அரசு, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தி, பராமரித்து, கல்வித் தரத்தை உயர்த்தி மாணவர்களின் வருங்கால உயர் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும், நல்வாழ்வுக்கும் உதவிடும் வகையில் முயற்சியில் ஈடுபட்டு தமிழகத்தை வளமான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று தமாகா சார்பில் கோரிக்கை வைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

