குடியரசுத் தலைவருக்கு நீட் விலக்கு மசோதா அனுப்பினார் ஆளுநர் ரவி..!!
குடியரசுத் தலைவருக்கு நீட் விலக்கு மசோதா அனுப்பினார் ஆளுநர் ரவி..!!

தமிழ்நாடிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரும் மசோதா கடந்த ஆண்டு செப்டம்பா் 13-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர். என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அரசு அனுப்பிய மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் 142 நாட்களுக்குப் பிறகு திருப்பி அனுப்பினார். இதையடுத்து திமுக கட்சி ஆளுநரின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்த தமிழ்நாடு அரசு, சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பியது. மேலும் இந்த நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், ஆளுநர் இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தக் கூடாது எனவும் தமிழ்நாடு அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் அனுப்பியுள்ளதாக, அவரின் தனி செயலாளர் தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.
மேலும், “நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கான நமது போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் கூட்டாக மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

