இந்தியாவில் புதிய பயண வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !!
இந்தியாவில் புதிய பயண வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !!

சீனாவில் தொடங்கிய முதல் வகை கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்தே இன்னமும் முழுமையாக விடுபடாத நிலையில் பல நாடுகளில் இரண்டாவது வகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் இரண்டாவது கட்ட ஊரடங்கும் சில நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் மேலும் இரண்டு வகை உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், மத்திய சுகாதார அமைச்சகம் புதிய பயண வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பிரிட்டன், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளைத் தவிர்த்து மற்ற உலக நாடுகளில் இருந்து பயணப்படும் அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க வகை, பிரேசில் வகை என இரண்டு மரபணு மாறிய கரோனா வைரஸ்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை தென் ஆப்பிரிக்க வகை வைரஸ் 4 பேரிடமும், பிரேசில் வகை வைரஸ் ஒருவரிடமும் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் உருமாறிய கரோனா வைரஸால் இதுவரை இந்தியாவில் 187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டு நெகட்டிவ் என்று முடிவு வந்தவர்கள் மட்டுமே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
பிரிட்டன், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பயணிகளும், ஐரோப்பா, பிரிட்டன், மத்திய கிழக்கு நாடுகள் வழியாகப் பயணப்படும் பயணிகளும் இந்தியா வந்திறங்கியதும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். தென் ஆப்பிரிக்கா, பிரேசிலில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமானங்கள் இல்லாத நிலையில் இங்கிருந்து வரும் பயணிகளுக்கும் புதிய பயண வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

