பெரும் எதிர்பார்ப்பு... விரைவில் இந்திய - பாகிஸ்தான் இடையே டி20 தொடர் !!
பெரும் எதிர்பார்ப்பு... விரைவில் இந்திய - பாகிஸ்தான் இடையே டி20 தொடர் !!

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் எதிர்பார்ப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்க்கும். இவ்விரு அணிகளுக்கும் இடையே கிரிக்கெட் தொடர் நடந்து சுமார் 8 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தற்போது இரு அணிகளுக்கும் இடையே டி-20 போட்டிகள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு நடைபெறும் என பாகிஸ்தான் நாட்டின் செய்தித்தாள் ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு அணிகளும் இந்த ஆண்டுக்குள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது.
இரு அணிகளுக்கும் இடையில் பிரத்யேக தொடர் கடைசியாக கடந்த 2012 - 13 வாக்கில் நடைபெற்றது. அதன்பிறகு எல்லையில் நடந்த சம்பவங்கள், அதனைத் தொடர்ந்து எழுந்த அரசியல் நெருக்கடியால் இரு அணிகளும் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பைக்கான தொடரில் மட்டுமே விளையாடி வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஜங் என்ற செய்தித்தாளில் விரைவில் இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டால் இது சாத்தியமாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாகிஸ்தான் அணி இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் பங்கு பெற உள்ளது. அதன் பிறகே இந்த தொடர் நடக்க சாத்தியம் இருப்பதாகவும் தெரிகிறது.
எனினும் இரு அணிகளுக்கும் இடையே டி20 தொடர் குறித்த பேச்சு நீண்ட காலத்திற்கு பிறகு எழுந்ததால் இதற்கு சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
newstm.in

