பெரும் சோகம்.. 5000 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த செவிலியர் தனது பிரசவத்தின்போது பலி !!
பெரும் சோகம்.. 5000 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த செவிலியர் தனது பிரசவத்தின்போது பலி !!

5000 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த செவிலியர் தனது பிரசவத்தின் போது உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி கவ்லி (38). அங்குள்ள அரசு மருத்துவமனையின் பிரசவ அறையில் 2 ஆண்டுகள் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அதற்கு முன்பாக, இரண்டு சுகாதார மையங்களில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர். இந்த ஐந்து ஆண்டு பணிக்காலத்தில் ஜோதி சுமார் 5 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பெற்றெடுக்க உதவி உள்ளார்.
இதனால் அப்பகுதி பெண்கள் மத்தியில் பெரும் மதிப்பு பெற்றவர் ஜோதி கவ்லி. இந்த நிலையில் இவரும் கருவுற்று பிரசவத்திற்கு தயாராகி வந்தார். தனது பிரசவத்துக்கு முதல்நாள் வரை அங்கு பணியாற்றிவிட்டு, பிறகு பணி முடிந்து நேராக மருத்துவமனையிலேயே பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், பிரசவத்துக்குப் பிறகு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக அவர் நான்டெட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. அவருக்கு திடீரென நிமோனியா மற்றும் பிற சிக்கல்கள் ஏற்பட்டது. இதனாலேயே அவரை காப்பாற்ற முடியாமல் போனதா கூறப்படுகிறது.
ஜோதி கவ்லியின் 5 ஆண்டுகள் பணிக்காலத்தில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்திருப்பார். ஆனால் தற்போது அவர் பிரசவத்தின் போது மரணமடைந்திருப்பது அப்பகுதி மக்கள் மற்றம் அவருடன் பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

