ராமேஸ்வரத்தில் அனுமன் சிலை.. பிரதமர் மோடி தகவல்..!
ராமேஸ்வரத்தில் அனுமன் சிலை.. பிரதமர் மோடி தகவல்..!

குஜராத்தில் 108 அடி உயர அனுமன் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, ராமேஸ்வரத்திலும் அனுமன் சிலை அமைக்கப்படும் என்று கூறினார்.
அனுமன் ஜெயந்தியை ஒட்டி குஜராத்தின் மோர்பி பகுதியில் அனுமன் சிலை திறக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
அதன்படி, அனுமன் ஜெயந்தியான இன்று, மோர்பி கேசவானந்த் ஆசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

டெல்லியில் இருந்தவாறு காணொலி மூலம் இந்த அனுமன் சிலையை திறந்து வைத்த பின்னர் அவர் பேசியதாவது; “இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நான் இருக்கும் வாய்ப்பை பெற்றதில் பெருமைப்படுகிறேன்.
நாட்டின் 4 திசைகளிலும் அனுமன் சிலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு ‘அனுமன்ஜி 4 தாம்’ திட்டத்தை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, தனியார் நிறுவனம் மூலம் நாடு முழுவதும் 4 திசைகளில் அனுமன் சிலைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, முதல் அனுமன் சிலை கடந்த 2010-ம் ஆண்டு இந்தியாவின் வடக்கு பகுதியான சிம்லாவில் நிறுவப்பட்டது.

குஜராத்தில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த 108 அடி உயர அனுமன் சிலை, நாட்டின் மேற்கு திசையில் அமைக்கப்பட்ட 2வது சிலையாகும். இந்த சிலையை நிறுவும் பணி கடந்த 2018-ம் ஆண்டு ரூ.10 கோடி செலவில் தொடங்கப்பட்டது.
இதையடுத்து, தெற்கே தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் 3வது அனுமன் சிலையும், மேற்கு வங்கத்தில் 4-வது சிலையும் அமைக்கப்படவுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
அண்மையில், ராமேஸ்வரத்தில் அனுமன் சிலை அமைக்கும் பணி அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

