மகிழ்ச்சியான செய்தி..!! ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..!!
மகிழ்ச்சியான செய்தி..!! ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..!!

தமிழ்நாட்டில் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 7-ம் தேதி முதல் 3 நாட்கள் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் இதன் தொடர்ச்சியாக ஜூன்13-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்தது. இதனிடையே, ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 22.02.2021 முதல் ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி பெற அனுமதிக்கப்பட்டிருந்தது.
1.01.2022 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கனிவுடன் பரிசீலித்து 1.01.2022 முதல் நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28% அகவிலைப்படி பெறவும், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களை பெறவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2,852 கட்டுநர்கள், என மொத்தம் 22,510 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு ஊழியர்கள் போன்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

