அரசு மருத்துவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!
அரசு மருத்துவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் 50% இட ஒதுக்கீடு மற்றும் 30% ஊக்க மதிப்பெண் என இரண்டுமே வழங்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசுசாரா மருத்துவர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு எம்.டி, எம்.எஸ் முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீதம் ஊக்கத்தொகை மதிப்பெண் வழங்கப்படும் என கடந்த 2021 அக்டோபர் மாதம் அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள முதுகலை மருத்துவப் படிப்பில் 1968 இடங்கள் உள்ளது என்றும், இதில் 50 சதவீதம் அகில இந்திய இட ஒதுக்கீடுக்கு சென்றுவிடும் என்றும் மீதமுள்ள 969 இடங்கள் உள்ளதாகவும், அதில் 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும் ஊக்க மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்குவதால் மீதமுள்ள 50 சதவீத இடங்களும் அரசு மருத்துவர்களுக்கே சென்றடைவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் தனியார் மருத்துமனையில் படித்தவர்களுக்கு வாய்ப்பு பறிபோவதாக குறிப்பிட்டுள்ளனர்.
எனவே இதில் ஏதாவது ஒன்றைத்தான் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதி தண்டபாணி, கிராமப்புற மருத்துவமனைகளில் பணி புரியக் கூடிய மருத்துவர்களுக்கு இரண்டுமே வழங்க எந்த தடையும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பொதுப் பிரிவிலும் அவர்கள் பங்கேற்க தடை இல்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து நீதிபதி பரேஷ் உபாத்யாயா, சக்திகுமார் சுகுமார குரூப் அமர்வில் மேல்முறையீடு செய்தனர்.
அப்போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் மற்றும் அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் அரசு மருத்துவர்கள், கிராமப்புறங்களில், மலைப்பகுதி அணுக முடியாத பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிவதாகவும் இதனால் பொதுமக்கள் தான் பயன் வருவதாகவும் தெரிவித்தனர்.

தனி நீதிபதி ஆராய்ந்துதான் உரிய உத்தரவு வழங்கி உள்ளதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவுபடி மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவே மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவு சரிதான் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவுபடி மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
newstm.in

