கட்சியில் இருந்து ஹரி நாடார் நீக்கம்.. ராக்கெட் ராஜா அதிரடி..!
கட்சியில் இருந்து ஹரி நாடார் நீக்கம்.. ராக்கெட் ராஜா அதிரடி..!

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவருக்கு கடன் வாங்கிக் கொடுப்பதாக பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹரி நாடாரை பனங்காட்டுப் படை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பனங்காட்டுப் படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தை குளத்தைச் சேர்ந்த அ.ஹரி நாடார் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிவுறுத்தல் படி மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஒப்புதலின்படி அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
அதனால், ஹரி நாடாரின் கருத்திற்கோ, செயலுக்கோ இனி பனங்காட்டுப் படை கட்சி பொறுப்பேற்காது. பனங்காட்டுப் படை உறவுகள் இவரோடு இனி கட்சி, அரசியல் செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது.

