என்னை மிஞ்சி விட்டார் அவர் : செல்லூர் ராஜூ சர்ட்டிபிகேட்..!
என்னை மிஞ்சி விட்டார் அவர் : செல்லூர் ராஜூ சர்ட்டிபிகேட்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மாணவர் சமுதாயத்தை ஏமாற்றும் வகையில் இந்த அரசு செயல்படுகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியவர்கள், தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக அரசு கொண்டு வந்த 7.5% உள் ஒதுக்கீடு சிறந்த திட்டம். ஆனால், அதனையும் இந்த அரசு பொருட்படுத்தவில்லை. அதிமுக அரசு கொண்டு வந்த பல்வேறு நல்ல திட்டங்கள் தொடருமா என்ற கேள்வி மாணவர்களிடம் உள்ளன” என்றார்.

அவரிடம் செய்தியாளர்கள், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அணில் விவகாரம் குறித்து கேட்டதற்கு, “நல்ல வேலை, நான் பிழைத்துக் கொண்டேன்; தெர்மாகோல் விட்டதற்காக என்னை நவீன விஞ்ஞானி என்று திமுகவினர் கிண்டல் செய்தார்கள். இப்போது, என்னை மிஞ்சி அணிலை கண்டுபிடித்துள்ளார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
எங்கள் ஆட்சியில் அணில் எல்லாம் வெளிநாடுகளுக்கு சென்று விட்டது போலவும், இந்த ஆட்சியில்தான் அணில்கள் மின் கம்பியில் போவது போலான இந்தக் கண்டுபிடிப்பை செய்த செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று செல்லூர் ராஜூ கூறினார்.

