வீடியோ எடுத்து, பாட்டு பாடியே மிரட்டுகிறார்.. கானா பாடகர் மீது பெண் பாலியல் புகார் !!
வீடியோ எடுத்து, பாட்டு பாடியே மிரட்டுகிறார்.. கானா பாடகர் மீது பெண் பாலியல் புகார் !!

பிரபல கானா பாடகர் ஒருவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு கானா பாடகர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக காவல்துறையில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில், கடந்த 2020ஆம் ஆண்டு கானா பாடல்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளரான சபேஷ் சாலமன் (35) என்பவருடன், தனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளுக்கு நாள் சபேஷ் சாலமன் தனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அதிக பாலியல் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்.

அதுபோன்ற நேரங்களில் தன்னுடன் தனியாக இருக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்த அவர், தற்போது சமூக வலைத்தளத்தில் அவற்றை வெளியிடுவேன் எனக் கூறி தொடர்ந்து மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
சபேஷின் தந்தை செல்வகுமாரிடம் அவரது மகன் குறித்து தெரிவித்தபோதும், அவரும் அவரது மகனுக்கு உடந்தையாக செயல்பட்டு தன்னை மிரட்டியதாக அப்பெண் புகார் கூறியுள்ளார். மேலும் சபேஷ் சாலமன் நடத்தும் யூடியூப் சேனலில் தன்னுடைய ஆபாசமான போட்டோ வீடியோக்களை வெளியிட்டதாகவும், மேலும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

தானொரு இசையமைப்பாளர் என்பதால் சபேஷ் சாலமன் பாட்டு பாடியே தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட பெண் ஆடியோ ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனவே சபேஷ் சாலமன் மற்றும் அவரது தந்தை மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

