தமிழக மக்களுக்கு நல்ல செய்தி சொன்ன சுகாதாரத் துறை அமைச்சர் !!
தமிழக மக்களுக்கு நல்ல செய்தி சொன்ன சுகாதாரத் துறை அமைச்சர் !!

“கொரோவால் பாதிப்படைவோர் விகிதத்தைவிட குணமடைவோர் எண்ணிக்கை இருமடங்காக உள்ளது. கொரோனா பரவல் குறைவதற்கு இது ஒரு அடையாளமாகும்” என, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி. சங்கர், மாதவரம் சுதர்சனம், சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வுமேற்கொண்டு, அங்கு நடைபெற்ற தடுப்பூசி போடும் பணிகளையும் பார்வையிட்டனர்.
அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது; “இந்தப் பகுதியில் மகப்பேறு மருத்துவத்தில் இந்த மருத்துவமனை சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையில் பொது மருத்துவமனையை இணைத்து மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், தேவையான மருத்துவர்கள் உடனடியாக நியமிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாகக் குறைந்துள்ளது. அத்துடன், பாதிப்படைவோர் விகிதத்தைவிட குணமடைவோர் எண்ணிக்கை இருமடங்காக உள்ளது. தமிழக முதல்வரின் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கையால் தற்போது 56,585 படுக்கைகள் காலியாக உள்ளன. கொரோனா பரவல் குறைவதற்கு இது ஒரு அடையாளமாகும்.

மேலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இன்று ஹைதராபாத், பூனேவிலிருந்து ஆறு லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பிவைக்கப்படும்.
கொரோனா இறப்பு அறிவிப்பு ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படியே செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒவ்வொரு விதிமுறை என எதுவும் இல்லை. கொரோனாவில் தாய், தந்தையை இழந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா சிகிச்சைக்கு வந்து இறப்போரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பலர் கொரோனா உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் அவர்கள் ஏதேனும் காரணங்களால் இறந்து வெளியே வரும்போது அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. எனவே, லேசான முதற்கட்ட அறிகுறிகள் தெரிந்த உடனே மருத்துவமனையை பொதுமக்கள் அணுக வேண்டும்" எனத் தெரிவித்தார்.

