நெஞ்சை உருக்கும் சோகம்.. தவிக்கும் 1.47 லட்சம் குழந்தைகள் !!
நெஞ்சை உருக்கும் சோகம்.. தவிக்கும் 1.47 லட்சம் குழந்தைகள் !!

கொரோனா தொற்றால் ஒரு லட்சத்து 47ஆயிரம் குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பை பறித்தது, மரணங்களை ஏற்படுத்தி உறவுகளை பிரித்தது. இதில் கொடூரம் என்னவென்றால் குழந்தைகளின் பெற்றோர்களை கொரோனா காவு வாங்கியதால், குழந்தைகள் பெற்றோரை இழந்து பரிதவித்து வருகின்றனர். கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நாட்டில் கொரோனா தொற்று 2020 மார்ச்சில் பரவ துவங்கியது. 2020 ஏப்ரல் முதல் தற்போது வரை, கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களால் 1.47 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள், தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர். இதில் 76 ஆயிரத்து 508 பேர் சிறுவர்கள். 70 ஆயிரத்து 980 பேர் சிறுமியர். நான்கு பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
இதில், ஒடிசா மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 24,405 குழந்தைகள் பெற்றோரை இழந்து உள்ளனர். மகாராஷ்டிராவில் 19,623 குழந்தைகளும், குஜராத்தில் 14 ஆயிரத்து 770 குழந்தைகளும், தமிழகத்தில் 11 ஆயிரத்து 14 பேரும் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களை மாநில அரசுகளும் யூனியன் பிரதேச நிர்வாகங்களும் ’பால் ஸ்வராஜ் கொவைட் கோ’ என்ற வலைதளத்தில் பதிவு செய்து வருவதாக தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் 3-ஆவது அலை பரவலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுடன் வரும் 19-ஆம் தேதி காணொலி வாயிலான கூட்டத்தை ஆணையம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
newstm.in

