நாளையும் இந்த 7 மாவட்டங்களில் கனமழை கொட்டும்! வானிலை மையம் எச்சரிக்கை !!
நாளையும் இந்த 7 மாவட்டங்களில் கனமழை கொட்டும்! வானிலை மையம் எச்சரிக்கை !!

வளிமண்டல சுழற்சி காரணமாக கோவை, திண்டுக்கல் உள்பட 7 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடும் வெயிலுக்கு மத்தியில் தற்போது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழையும் பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக சில இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்றும் பெரும்பாலான இடங்களில் மழை தொடர்கிறது.
குறிப்பாக, சென்னை, திருப்பூரில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் கடும் வெப்பம் காரணமாக மக்கள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் சென்னையில் இன்று அதிகாலையில் இருந்து பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பரவலாக மிதமான மழை பெய்த நிலையில் அதிகாலை முதல் கனமழை பெய்தது. நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மழை தொடர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்கிறது. அதன்படி, இன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடனும், மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலான காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

அதேநேரத்தில் நாளை( ஏப்.16) தென்தமிழகம், வடக்கு உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

