புதுச்சேரியில் ஹெல்மெட் புயல்! கிரண்பேடி மீது முதல்வர் சரமாரி புகார் !!
புதுச்சேரியில் ஹெல்மெட் புயல்! கிரண்பேடி மீது முதல்வர் சரமாரி புகார் !!

ஹெல்மெட் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி போலீஸ் அதிகாரிகளை வைத்து மக்களை துன்புறுத்துவதுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதுச்சேரியில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளும் படிப்படியாக குறைந்து வருகின்றது. மோட்டார் வாகன சட்டம் குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டப்பின்பு படிப்படியாக அமல்படுத்தப்படும் என பேரவையில் முடிவெடுக்கபட்டது.
ஆனால், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி போலீஸ் அதிகாரிகளை மிரட்டி ஹெல்மெட் போடாமல் செல்பவர்களை பிடித்து அதிகளவு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார். இதனால்தான் பொதுமக்கள் வாகனங்களை போலீசார் பிடித்து வருகின்றனர்.

மற்ற மாநிலங்களில் புதிய மோட்டார் வாகன சட்டங்களை அமல்படுத்தினாலும் கெடுபிடிகள் இல்லை ஆனால் புதுச்சேரி மாநில மக்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்படுகிறார்.
மத்தியில் உள்ள பாஜக அரசு நியமித்த ஆளுநர் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார். ஆனால், புதுச்சேரி பாஜக ஹெல்மெட்டுக்கு தடை கேட்டு இரட்டை வேடம் போடுகின்றது.
புதிய போக்குவரத்து சட்டத்தை படிப்படியாக அமல்படுத்த வேண்டுமே தவிர மக்களை துன்புறுத்தக்கூடாது என்றார். மேலும், அதிக அளவு அபராதம் விதிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

