தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை..!!
தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை..!!

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு கடந்த 23-ம் தேதி அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 7,500 ரூபாய் தொகுப்பூதியமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், முதுகலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள்.
தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், தமிழ்நாடு அரசுத் தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நிரந்தரமாக ஆசிரியர்கள் நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்னை என்று கேள்வி எழுப்பியதோடு, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை வருகிற 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

