ஹிஜாப் விவகாரம்: வெளி கருத்துகள் ஏற்கப்படாது.. அமெரிக்காவுக்கு மத்திய அரசு பதிலடி..!
ஹிஜாப் விவகாரம்: வெளி கருத்துகள் ஏற்கப்படாது.. அமெரிக்காவுக்கு மத்திய அரசு பதிலடி..!

கர்நாடகாவில் நடந்து வரும் ஹிஜாப் சர்ச்சை குறித்து, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க அலுவலகம் (ஐஆர்எஃப்) ‘கர்நாடக ஹிஜாப் தடை மத சுதந்திரத்தை மீறுவதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளை களங்கப்படுத்துவதாகவு, அவர்களை ஒதுக்கி வைப்பதாகவும் இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஐஆர்எஃப்-ன் அமெரிக்க தூதர் ரஷாத் ஹுசைன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத சுதந்திரம் என்பது ஒருவருடைய மதரீதியான ஆடைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமைகளை சேர்த்ததே.
மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியலாமா, அணியக் கூடாதா என்பதை கர்நாடக அரசு முடிவு செய்யக்கூடாது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிப்பது பெண்களின் மத சுதந்திரத்தை களங்கப்படுத்துவது போன்றது” என பதிவிட்டுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மெல்போர்னில் நடந்த நான்காவது குவாட் அமைச்சர்கள் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்த சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த அறிக்கை வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘கர்நாடாகாவின் சில கல்வி நிறுவனங்களில் நிலவி வரும் சீருடை சம்பந்தமான பிரச்சனை உயர் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. எனவே, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக உள்நோக்கம் கொண்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளி கருத்துகள் எப்போதும் ஏற்கப்படாது’ என, மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.

