வரும் 26-ம் தேதி விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!
வரும் 26-ம் தேதி விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். மாமன்னன் ராஜேந்திர சோழனால், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயம் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக் கலைகளின் அழகிய தொகுப்பாகவும், வாழும் வரலாறாகவும் விளங்குகிறது.
இந்த ஆலயத்தை, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பை கண்டு களித்திட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
உலக பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் திருவாதிரை விழா அப்பகுதி மக்களால் வெகு விமரிசையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.
மாவட்ட அளவில் கொண்டாடப்படும் இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இந்த நிலையில், வரும் 26-ம் தேதி ஆடி திருவாதிரையில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதால், அன்று அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.

