இந்த கல்லூரிக்கு டிச.12 வரை விடுமுறை.. நிர்வாகம் அறிவிப்பு..!
இந்த கல்லூரிக்கு டிச.12 வரை விடுமுறை.. நிர்வாகம் அறிவிப்பு..!

தமிழகத்தின் ஒரே அரசு ஹோமியோபதி கல்லூரியான மதுரை திருமங்கலம் கல்லூரியைச் சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் கல்லுாரிக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பெய்த தொடர் மழையால் கண்மாய்களில் நீர்வரத்து அதிகரித்து மறுகால் பாய்ந்ததால் கல்லூரியைச் சுற்றி தண்ணீர் தேங்கி தீவாக மாறியது. கல்லூரியின் பள்ளமான இடங்களில் ஒரு ஆள் உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

தண்ணீர் வெளியேறும் வாய்க்கால் பராமரிக்காததால் தாமதமாக வெளியேறுகிறது. கண்மாய் தண்ணீர் குறையாததால் கல்லூரியில் தேங்கிய தண்ணீரும் வற்றவில்லை. இதனால் டிச.,2 முதல் 12 வரை கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வகுப்புகள் ஆன்லைனில் எடுக்கப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: ‘மாணவ, மாணவிகளின் விடுதிகள் பராமரிப்பின்றி இடிந்ததால் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வேண்டியுள்ளது. மாணவிகளுக்கு கழிப்பறை வசதியில்லை. இடிந்து போன கழிப்பறையை புதுப்பிக்கவும் இல்லை. உள்நோயாளிகளுக்காக அமைக்கப்பட்ட வார்டில் உள்ள கழிப்பறையை தான் மாணவிகள் பயன்படுத்துகின்றனர்.
நோயாளிகளை நேரில் பார்த்து தான் பயிற்சி பெற முடியும். ஆன்லைனில் 'தியரி' படிப்பதால் பயனில்லை. அதிக மழை பெய்தால் பள்ளமான இடத்தில் மீண்டும் தண்ணீர் தேங்கும் என்பதால் ஒதுக்குபுறமாக இல்லாமல் போக்குவரத்து வசதி உள்ள வேறு இடத்தில் கல்லூரியை மாற்ற வேண்டும்’ என்றனர்.

