சூடாகும் விலையேற்றம்.. தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம் !!
சூடாகும் விலையேற்றம்.. தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம் !!

தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக உற்பத்தியாளர்கள் தற்காலிக உற்பத்தி நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் அனைத்து வகையான பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதில் இருந்து தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலையும் தப்பவில்லை. தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை கணிசமான அளவு அதிகரித்து உள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உற்பத்தியாளர்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி உற்பத்தி நிறுத்தத்தை அறிவித்து இருக்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் 50 முழு நேர தீப்பெட்டி ஆலைகள், 320 பகுதிநேர தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளை பேக்கிங் செய்வதற்கென்றே 2,000 பேக்கிங் ஆலைகள் உள்ளன. நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சம் பேருக்கு இதனால் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இவர்களில் 90% பேர் பெண்கள்.

அதிலும், பட்டாசு உற்பத்திக்கு பெயர்போன விருதுநகரில் தான் தீப்பெட்டிகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிவகாசி, சாத்தூரில் ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிதான் வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு பல்வேறு பிராண்டுகளின் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தீப்பெட்டி உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களான பாஸ்பரஸ், மெழுகு, குளோரைடு, அட்டை, பேப்பர் போன்றவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனை தாக்குபிடிக்க முடியாமல் ரூ.1-க்கு விற்கப்பட்டு வந்த தீப்பெட்டியின் விலை 14 ஆண்டுகளுக்கு பின் ரூ.2 ஆக உயர்த்தப்பட்டது.

இருப்பினும் கடந்த 3 மாதங்களில் தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் விலை 30 முதல் 40% வரை அதிகரித்து இருப்பதால் தீப்பெட்டி விலையை உயர்த்தியும் பலன் கிடைக்கவில்லை.
தீப்பெட்டி விலையை உயர்த்துவதன் மூலம் மட்டும் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது என்பதை உணர்ந்த உற்பத்தியாளர்கள் மூலப்பொருட்களின் விலையை குறைக்க அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவே வரும் ஏப்ரல் 6 ஆம் தேதியிலிருந்து 17 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்து உள்ளனர்.
newstm.in

