இப்படி எல்லாம் பேசினால்.. தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை..!
இப்படி எல்லாம் பேசினால்.. தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை..!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில், பல மொழிகளில் எப்.எம். ரேடியோ நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வருகின்றன. இவற்றில், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ரேடியோ 'ஜாக்கி'கள் பலரும் அருவருக்கத்தக்க மற்றும் ஆபாச வார்த்தைகளை பேசுவதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில், அனைத்து எப்.எம். ரேடியோ நிறுவனங்களுக்கும் ஓர் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதில், ‘எப்.எம். ரேடியோ நிறுவனங்களுக்கான அனுமதி ஒப்பந்தத்தில், ‘ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள், செய்திகள், விளம்பரங்கள் அநாகரிகமானதாக, ஆபாசமானதாக, சட்டத்திற்கு விரோதமாக இருக்கக்கூடாது' என விதிகள் கூறுகின்றன.
ஆனால், பல எப்.எம். ரேடியோ ஜாக்கிகள் அநாகரிகமான, ஆபாசமான, இரட்டை அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
அத்துடன், பிறர் மனம் புண்படும் வகையில், தரக்குறைவான விமர்சனங்களையும் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற செயல்களை தொடர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விதிமீறலில் ஈடுபடும் எப்.எம். நிறுவனங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

