குதிரையில் சென்றால் தாக்குவோம்.. 100 போலீசார் பாதுகாப்புடன் நடந்த திருமணம்..!
குதிரையில் சென்றால் தாக்குவோம்.. 100 போலீசார் பாதுகாப்புடன் நடந்த திருமணம்..!

மத்தியபிரதேச மாநிலம் நீமட்ச் மாவட்டம் சர்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பகிர்சந்த் மெக்வால். இவருடைய மகன் ராகுலுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு முன்னதாக, பிண்டுலி என்ற நிகழ்ச்சி நடைபெறு வழக்கம். அந்த நிகழ்ச்சியில், மணமகன் குதிரையில் அமர்ந்தவாறு கிராமத்தின் தெரு வழியாக திருமணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்படுவார்.

இதற்கிடையில், மணமகன் ராகுல் கிராமத்தின் தெருக்களில் குதிரையில் செல்ல அதே கிராமத்தின் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ராகுல் குதிரையில் வந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ராகுலின் தந்தை பகிர்சந்திடம் சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து, தனது மகனின் திருமணத்திற்கு இடையூறு ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும், திருமணத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் ராகுலின் தந்தை, மசானா பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

இதனை தொடர்ந்து, ராகுலின் திருமண விழாவில் இடையூறுகள் ஏற்படுவதை தடுக்க கிராமம் முழுவதும் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
போலீசார் பாதுகாப்புடன் கிராமத்தின் தெருக்கள் வழியாக மணமகன் ராகுல் குதிரையில் வந்து திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்றார். அதன் பின்னர், ராகுலின் திருமணம் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி நடைபெற்றது.

