"நான் அரசியலில் முழுநேரமாக ஈடுபட உள்ளேன்" பிரபல நடிகை அறிவிப்பு !
"நான் அரசியலில் முழுநேரமாக ஈடுபட உள்ளேன்" பிரபல நடிகை அறிவிப்பு !

நான் சிறிது காலம் நடிப்பதில் இருந்து விலகி, அரசியலில் ஈடுபட்டு முழுநேரமாக பணியாற்ற உள்ளேன் என பிரபல நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேலூர் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகரும், அக்கட்சியின் தலைவருமான சரத்குமார், புரட்சி பெயர் பெற்ற ஊர் என்றால் அது வேலூர் தான். இந்த வேலூரிலிருந்து முதல் தேர்தல் ஆலோசனை கூட்டத்தை தொடங்கி உள்ளோம். கடந்த 14 ஆண்டுகளாக சாதி, மதம் பார்க்காமல் கட்சி நடத்தி வருகிறோம்.

எதையும் சாதிக்க வேண்டும் என்றால் உழைப்பு, உறுதி,நம்பிக்கை இருக்க வேண்டும். யாரும் பணத்தை கொடுத்தால் வாங்காதீர்கள். நீங்கள் ரசிர்களாக இருந்தது போதும், இனி வரும் காலத்தில் அரசியல்வாதிகாளாக மாறுங்கள் அப்போதுதான் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்றார்.
அவரைத்தொடர்ந்து பேசிய நடிகையும், அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளருமான ராதிகா, "எங்கள் தலைவர் பழகுவற்கு மென்மையானவர். மிகவும் எளிமையானவர். யாருக்காவது உதவி தேவை என்றால், அவர்கள் கேட்கும் முன்னே ஓடிச்சென்று உதவி செய்வது அவரது ஸ்டைல். அதனால்தான் அவர் இன்றும் அனைவராலும் விரும்பப்படும் தலைவராக இருக்கிறார்.
அதுமட்டுமல்ல, இதுவரை அவர் யாரிடமும் சாதி, மதம் பார்த்து பழகவில்லை என்று கூறியவர், நான் தற்போது முக்கிய முடிவு எடுத்துள்ளேன். அது என்னவென்றால், நான் சிறிது காலம் நடிப்பதில் இருந்து விலகி, அரசியலில் ஈடுபட்டு முழுநேரமாக பணியாற்ற உள்ளதாக நடிகை ராதிகா தெரிவித்தார். அவரது அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கரவொலி எழுப்பினர்.

