தொழில் தொடங்க கடன் தொகை அதிகரிப்பு.. கூட்டுறவு வங்கி தாராளம்..!
தொழில் தொடங்க கடன் தொகை அதிகரிப்பு.. கூட்டுறவு வங்கி தாராளம்..!

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிகளின் ஆண்டு வருவாய் உயர்ந்துள்ளதால், சுயஉதவிக் குழுக்கள், தனிநபர் தொழில் கடன் தொகை கூடுதலாக வழங்கவுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கவரை தெருவில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 52 கிளைகள் இயங்கி வருகின்றன. இந்த வங்கிகளின் மூலம் பயிர்க் கடன், நகைக் கடன், தொழில் கடன் மற்றும் குறுகிய கால முதலீடுகள், நீண்ட கால முதலீடுகள் என, பலவித முதலீடுகள் பெறப்படுகின்றன.

இக்கடன் மற்றும் முதலீடு பரிவர்த்தனைகளில் கிடைக்கும் வட்டி மற்றும் சேவை வரிகளால், ஆண்டுதோறும் கணிசமான லாப வருவாயை காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ஈட்டி வருகிறது.கடந்த 2016 - 2017ம் ஆண்டில் 17.38 கோடி ரூபாய் நிகர லாப வருவாய் ஈட்டி உள்ளது. அடுத்த நிதியாண்டான 2017 - 2018ல் கூடுதலாக 3 கோடி ரூபாய் உயர்ந்து இருக்கிறது. ஒவ்வொரு நிதியாண்டுகளில் தலா 2 கோடி ரூபாய் வருவாய் என, லாப வருவாய் கூடுதலாக ஈட்டி வருகிறது.
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தணிக்கையின்போது, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக, 'ஏ' கிரேடு என, அழைக்கப்படும் முதல் இடம் வகித்து வருகிறது.அதேபோல் வாராக்கடன்களிலும், 9.16 சதவீதத்தில் இருந்து, 11.16 சதவீதம் என, 2 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என, தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள், சுயஉதவிக் குழுக்கள், தனிநபர் தொழில் தொடங்க கடன் வழங்கும் வசதி, வங்கிகளுக்கு சொந்த கட்டடம் கட்டுவது, வங்கிகள் நவீனமயமாக்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும் என கூட்டுறவுத் துறையினர் தெரிவித்தனர்.
“காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமாக, 25.34 கோடி ரூபாய் லாப வருவாய் ஈட்டி உள்ளது. இது, கடந்த ஆண்டைவிட நடப்பாண்டிற்கு2 கோடி ரூபாய் கூடுதலாகும். மேலும், 'டிபாசிட்' தொகை கூடுதலாகி உள்ளது. அதேபோல் வங்கிகளின் இருப்பு நிதியும், கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக மகளிர் குழுக்களுக்கு கடன், பயிர் கடன், தொழில் கடன், வங்கிகளுக்கு சொந்த கட்டடம் என, நிதி ஒதுக்கீடு செய்து, பலவித வளர்ச்சி பணிகள் மேம்படுத்த உள்ளோம்” என காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பா.கணேசன் தெரிவித்தார்.

