இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி.. டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது இந்திய அணி !!
இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி.. டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது இந்திய அணி !!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர்-12’ சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. அபுதாபியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெறும் என்பதால் இந்திய ரசிகர்களும் இப்போட்டியை ஆவலுடன் எதிர்பாத்து இருந்தனர்.
இந்த நிலையில், போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கிற்கு வந்த அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஹஸ்ரத்துல்லா ஷசாய் (2) முகம்மது ஷக்சாத் (4) குறைந்த ரன்களில் வெளியேறினர். ஆப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாடிய நிலையில் நஜீபுல்லா மற்றும் முகம்மது நபி இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

நபி ஒருபுறம் நிதானமாக விளையாட, மறுமுனையில் நஜீபுல்லா பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டார். அவர் 43 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 73 ரன்கள் குவித்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் போல்ட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்ளை கைப்பற்றினார்.
125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி அடுத்து களமிறங்கியது. தொடக்கம் முதலே சிறப்பாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி சீரான வேகத்தில் ரன்குவித்தது. அதன்படி நியூசிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது. அதிபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 40 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 8 புள்ளிகள் பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அதேநேரத்தில் நியூசிலாந்து அணியின் வெற்றியால் அரையிறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.
newstm.in

