நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை!
நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை!

நடிகர் விஜய் கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வகை காரை இறக்குமதி செய்துள்ளார். இந்தக் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, காரை இறக்குமதி செய்தபோது இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

அத்துடன், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பாக விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டில் அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னைப் பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கப்பட்டது.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ‘இது போன்று வேறு எந்த நுழைவு வரியை எதிர்த்த வழக்குகளிலும் இது போன்று அபராதம் விதிக்கப்படவில்லை. தனி நீதிபதியின் கடுமையான விமர்சனத்தால் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது. அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே 20% நுழைவு வரி செலுத்தப்பட்டு விட்டது. ஒரு வாரத்தில் மீதி தொகையை செலுத்த தயார்’ என்று விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.
விஜய் தரப்பு வாதத்தை கேட்ட இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ‘நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி கருத்துக்கள் தெரிவித்தும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

