8 நாட்களுக்கு வங்கி விடுமுறையா? வலம் வரும் வாட்ஸ்-அப் வதந்தி!!
இந்த மாதம் பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து 8 நாட்களுக்கு செயல்படாது என்றும், அதனால் உங்கள் வங்கி பரிவர்த்தனைகளை இப்போதே முடித்துக் கொள்ளுங்கள் என்றும் வாட்ஸ்-அப்களில் வதந்தி பரவி வருகிறது. மேலும், ஏடிஎம் இயந்திரங்களிலும் இந்த நாட்களில் பணம் நிரப்பப்படாது என்கிற தகவல் உலா வருகிறது.

இந்த மாதம் பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து 8 நாட்களுக்கு செயல்படாது என்றும், அதனால் உங்கள் வங்கி பரிவர்த்தனைகளை இப்போதே முடித்துக் கொள்ளுங்கள் என்றும் வாட்ஸ்-அப்களில் வதந்தி பரவி வருகிறது. மேலும், ஏடிஎம் இயந்திரங்களிலும் இந்த நாட்களில் பணம் நிரப்பப்படாது என்கிற தகவல் உலா வருகிறது.
இது போன்ற தகவல்கள் பொதுமக்களிடையே பீதியையும், பரபரப்பையும் மன உளைச்சலையுமே ஏற்படுத்தி வருகின்றன. வங்கி ஊழியர்களுக்கு 5 வருடங்களுக்கொரு முறை ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் போடப்படும். இந்த ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதத்தோடு நிறைவடைந்த நிலையில், இது வரையில் புதிய ஒப்பந்தம் போடப்படவில்லை. இது குறித்து மத்திய நிதித்துறை அதிகாரிகள் வங்கி ஊழியர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த ஜனவரி மாதம் 31 மற்றும் பிப்.1 ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வங்கி ஊழியர்கள் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளதாக திட்டமிட்டிருப்பதால் மார்ச் மாதம் 11ம் தேதியில் இருந்து 13ம் தேதி வரையில் வங்கிகளின் யூனியன் வங்கி ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் ஆகியவை இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை. இந்நிலையில், மார்ச் 9, 10 ஹோலி பண்டிகை கொண்டாட்டம் என்பதால் தொடர்ந்து 8 தினங்களுக்கு, மார்ச் 8ம் தேதி துவங்கி விடுமுறை என்று வாட்ஸ் அப்பில் வதந்தி பரவி பொதுமக்களிடையே அதிர்ச்சியை கிளப்புகின்றன.

இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் பேசிய போது, ஞாயிறு வழக்கமான விடுமுறை தான் என்றும், 11 முதல் 13ம் தேதி வரையில் மட்டுமே வங்கிகள் செயல்படாது என்றும் தெரிவித்தனர். மேலும், ஹோலி பண்டிகைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை எல்லாம் வங்கிகளுக்கு கிடையாது என்றும், ஹோலி பண்டிகையை தமிழகத்தில் பெரிய அளவில் கொண்டாடுவது கிடையாது. வட இந்தியாவில் மட்டுமே ஹோலி பண்டிகைக்கு விடுமுறைகள் விடப்படுகின்றன. தவிர, இந்த நாட்களிலும் ஆன்லைன் வங்கி சேவைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியிலும் பாதிப்புகள் இருக்காது. தேவையான அளவு ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தனர்.
எனவே, பொதுமக்கள் தொடர்ந்து 8 தினங்கள் வங்கிகள் செயல்படாது என்கிற தகவல் குறித்து அச்சப்படத் தேவையில்லை. வரும் வாட்ஸ் அப் தகவல்களை அப்படியே நம்ப வேண்டாம்.
newstm.in

