கோவாக்சின் தடுப்பூசியால் இந்தியர்களுக்கு சிக்கல்? வெளிநாடு செல்ல முடியாதா!!
கோவாக்சின் தடுப்பூசியால் இந்தியர்களுக்கு சிக்கல்? வெளிநாடு செல்ல முடியாதா!!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பெரும் நம்பிக்கை அளிப்பது தடுப்பூசி மட்டுமே. அனைத்து நாடுகளும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தியுள்ளன. உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உள்நாட்டு அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படலாம் என கருதப்படுகிறது. தற்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தொற்று குறைந்திருப்பதால் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், விமான போக்குவரத்தை தொடங்கவும் அனுமதி அளித்துள்ளன.

இதற்காக அந்தந்த நாடுகளில் உள்ள சுகாதார அமைச்சகங்கள் அளிக்கும் பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிகிறது. அல்லது, உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களை அனுமதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி மருந்தை உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்காதால், அந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படலாம். அவசர கால தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அனுமதி பட்டியலில், கோவாக்சின் தடுப்பூசி மருந்து இதுவரை இடம்பெறவில்லை. இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்தும் அவசர பயன்பாடு பட்டியலில் இடம்பெறவில்லை.

அதேசமயம் இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு மருந்து இடம்பெற்றுள்ளது. பைசர் பயோன்டெக், அஸ்ட்ராஜெனேகா, ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடர்னா, சினோபார்ம் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகளும் உலக சுகாதார அமைப்பின் அனுமதி பட்டியலில் உள்ளன.
எனினும், கோவாக்சின் மருந்தை உலக சுகாதார அமைப்பின் பட்டியலில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
newstm.in

